கியான்வாபி சிவில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு

கியான்வாபி மசூதி | கோப்புப் படம்
கியான்வாபி மசூதி | கோப்புப் படம்
Updated on
1 min read

அலகாபாத்: கியான்வாபி மசூதிக்கு எதிராக தொடரப்பட்ட சிவில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம், 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் இந்த வழக்கை தடை செய்ய முடியாது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள இந்து கோயிலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் வாரணாசி நீதிமன்றம், அந்த இடத்தில் விரிவான ஆய்வு நடத்த கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது. வாரணாசி நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கியான்வாபி மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இன்டேசாமியா மசூதி குழுவும்(AIMC), உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியமும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோருவதை தடை செய்து கொண்டு வரப்பட்ட சிறப்பு வழிபாட்டுச் சட்டம் 1991ன் படி கியான்வாபி மசூதிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு சட்டவிரோதமானது என்றும், எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உரியது அல்ல என்றும் மசூதி தரப்பில் வாதிடப்பட்டது. காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கட்டப்பட்டுள்ள இந்த மசூதி கோயிலுக்குச் சொந்தானது என்று கோயில் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 8ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கியான்வாபி மசூதிக்கு எதிராக தொடரப்பட்ட சிவில் வழக்குகள் 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு நாட்டின் இரு பெரும் சமூகங்களை பாதிக்கும் என்பதால் விசாரணையைத் துரிதப்படுத்தி 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in