

புதுடெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள நாட்டுக்காக நன்கொடை அளியுங்கள் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது.
நேற்று தொடங்கிய இந்த பிரச்சாரத்தை, கட்சியின் தேசியத் தலைவர் கார்கே தொடங்கி வைத்து, தனது ஊதியத்திலிருந்து 1,38,000 ரூபாயை நன்கொடையாக வழங்கினார். நன்கொடை செய்வதற்காககாங்கிரஸ் சார்பில் செல்போன்செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.138, ரூ,1,380, ரூ.13,800, ரூ.1,38,000 என்ற தொகைகளில் நன்கொடை அளிக்கலாம். நன்கொடை பிரச்சார விழாவில் கார்கே பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி மக்களிடம் இருந்து நன்கொடை பெற செயலியை உருவாக்கியிருக்கிறது. நாட்டை கட்டியெழுப்ப, காங்கிரஸ் கட்சி தற்போதுதான் முதல் முறை மக்களிடமிருந்து நன்கொடை கோருகிறது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள நாட்டுக்காக மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ரூ.138, ரூ,1,380 என்ற ரீதியில் நன்கொடை பெறப்படுகிறதே என்ற கேள்விக்கு கார்கே கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இதுபோன்ற தொகையை நன்கொடையாகப் பெறுகிறோம். பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் ரூ.138, ரூ.1,380 அல்லது ரூ.13,800, ரூ.1,38,000 என தங்களால் இயன்றதொகையை கட்சிக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 21-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அக்கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவேமூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாதயாத்திரையாகவும், வாகனத்திலும் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம்முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.