

சக மனிதர்களிடையே சமத்துவத்துக்கே பாடாய்ப்படும் வேளையில், பிரதமர் மோடியோ டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிப்பது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார் என தலித் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் டிசம்பர் 31-ம் தேதி பீமா கோரேகான் போர் நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் தலைவர் உமர் காலித், தலித் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், ராதிகா வெமுலா ஆகியோர் பேசினர். பின்னர் ஜனவரி 1-ம் தேதி சன்சவாடி என்ற கிராமத்தில் நடந்த கலவரத்தில் ஓர் இளைஞர் கொல்லப்பட்டார். இந்நிலையில், இரு பிரிவினர் இடையே விரோதத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் ஆகியோர் மீது புனே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் நான் ஏதும் பேசவில்லை. தலித்துகள் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என தலித் எம்.எல்.ஏ., ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் பேசியதாவது:
உனா சம்பவம், சபீர்பூர் சம்பவம், பீமா - கோரேகான் சம்ப்வம் இவற்றில் எவை குறித்தும் பிரதமர் பேசவில்லை. தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைய வேண்டும்.
வெறுப்பைத் தூண்டும் வகையில் நான் ஏதும் பேசவில்லை. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் பாஜகவினரும் சங்கிகளும் என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
என்னைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கே, தலித் தலைவருக்கே இந்த நிலை என்றால் ஒரு சாதாரண ஏழை தலித்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அவர்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்?" என வினவியுள்ளார்.
டெல்லியில் மெகா பேரணி..
டெல்லியில் விரைவில் பேரணி ஒன்று நடத்தப்படும் என மேவானி தெரிவித்தார். "முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அம்பேத்கர் கொள்கை பிடிப்பாளர்கள் இணைந்து விரைவில் டெல்லியில் பிரதமர் மோடியின் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவிருக்கிறோம். அப்போது மனு சாஸ்திரத்தை ஒரு கையிலும் அரசியல் சாசனத்தை மற்றொரு கையிலும் ஏந்தி பேரணியாகச் செல்கிறோம். அங்கே பிரதமர் அலுவலகம் முன் நின்று, அவர் மனு சாஸ்திரத்தையா அல்லது அரசியல் சாசனத்தையா எதை தேர்வு செய்வார் என உரக்கக் கேட்போம்.
இங்கே, சக மனிதர்களிடையே சமத்துவத்துக்கே பாடாய்ப்படும் வேளையில், பிரதமர் மோடியோ டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிப்பது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.