சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி

சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி
Updated on
1 min read

புதுடெல்லி: சமர் வான் பாதுகாப்பு ஏவுகணை கருவிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐஏஎப் அதிகாரிகள் கூறியதாவது:

சமீபத்தில் சூர்யலங்கா விமானப் படை தளத்தில் நடைபெற்ற அஸ்ட்ராசக்தி-2023 பயிற்சியின் போது இந்திய விமானப் படை உள்நாட்டில் வடிவமைத்து உருவாக்கிய ‘சமர்’ வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக வெவ்வேறு சூழ்நிலைகளில் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இந்த ஏவுகணை துல்லியமாக நிறைவேற்றியது. இந்த ஏவுகணை அமைப்பு 2 முதல் 2.5 மாக் வேகத்தில் இயங்கும் ஏவுகணைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பை வழங்கும். அச்சுறுத்தல் சூழ்நிலைகளைப் பொருத்து சமர் அமைப்பு இரட்டை ஏவுகணைகளை ஏவுவதற்காக இரண்டு ட்ரட் ஏவுதளங்களைக் கொண்டுள்ளது.

சமர் ஏவுகணை அமைப்பின் செயல்திறனை விமானப் படை தளபதி ஏர் சீப் மார்ஷல் வி. ஆர். சவுதாரி மற்றும் விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் ஆகியோர் ஏற்கெனவே நேரில் பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். தன்னிறைவு திட்டத்தின்படி பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அதன் அடிப்படையில், போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தரை ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், உபகரணங்கள் உள்நாட்டில் உருவாக்குவதிலும், அதனை பராமரிப்பதிலும் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றி கிடைத்துள்ளது. சமர் வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய விமானப் படையின் 7 பிஆர்டி-யால் (பேஸ் ரிப்பேர் டிபாட்) உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in