வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது: 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது: 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி
Updated on
2 min read

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார்.

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்றார். இங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையையும் தொடங்கிவைத்து, அரசு திட்ட பயனாளிகளுடன் பேசினார். பின்னர், பனாரஸ் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரமாவது ரயில்இன்ஜின், வாரணாசி - டெல்லி வந்தே பாரத் ரயில் சேவை, கன்னியாகுமரி முதல் பனாரஸ் வரை செல்லும் காசி தமிழ் சங்கமம் புதியவிரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமத்தின் 2-ம் ஆண்டு நிகழ்ச்சியை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் மோடி நேற்று மாலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள், விவசாயிகள், கைவினைகலைஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என 1,400 பேர் 7 ரயில்களில் அரசு செலவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: காசி - தமிழ்நாடு இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்பது சிவபெருமானின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவதாக அர்த்தம். அதனால்தான் தமிழக மக்களுக்கும், காசிக்கும் இடையிலான பிணைப்பு சிறப்பு வாய்ந்தது. இங்கு வந்துள்ளவர்கள் விருந்தினர்களாக இன்றி, குடும்ப உறுப்பினர்களாக வந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறேன். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை காசிதமிழ் சங்கமம் பலப்படுத்துகிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் இணைந்து காசி தமிழ் சங்கமத்தை வெற்றி பெறச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். காசியை சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் உதவ ‘வித்யா சக்தி' என்ற திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்தியா என்பது ஆன்மிக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் தங்கள் பயணங்கள் மூலம் இந்தியாவின் தேசிய உணர்வை தட்டி எழுப்பியதால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் மொழி பெயர்ப்பு நூல்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இதில் 10 இந்திய மொழிகள் மற்றும் 5 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளையும் பிரதமர் வெளியிட்டார். பிரெய்லிமுறையிலான திருக்குறள், சங்கஇலக்கியம், இலக்கண நூல்களும் வெளியிடப்பட்டன.

விழாவில் உ.பி ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான்,எல்.முருகன், முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். பிரதமர் இந்தி உரையின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு, ‘பாஷினி’ என்ற செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in