

குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் ஆகியோர் மீது புனே போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 31-ம் தேதி சனிவார்வாதா கோட்டையில் உரையாற்றியபோது இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீமா-கோரேகான் போர் நினைவு நாளில் ஒருங்கிணைக்கப்பட்ட அந்த நிகழ்வில் தலித் சமூக தலைவரும் குஜராத் எம்.எல்.ஏ.,வுமான ஜிக்னேஷ் மேவானி, ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித், பிரகாஷ் அம்பேத்கர், டோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில், ஜிக்னேஷ் மேவானி மற்றும் உமர் காலித் மீது மட்டும் சட்டப் பிரிவுகள் 153 ஏ, 505, 117, ஆகியனவற்றின் கீழ் புனே நகர வாதா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. டெக்கான் ஜிம்கானா காவல் நிலையத்தில் அக்ஷ்ய பிடாட், ஆனந்த் தோன்ட் என்ற இரண்டு இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள் இருவருமே தங்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையோ, மேவானி, உமர் காலித் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ பதிவை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.