Published : 20 Jan 2018 06:00 PM
Last Updated : 20 Jan 2018 06:00 PM

‘புது வண்டி ரத்தக் கறையாகிவிடும்’ என உயிருக்கு போராடிய சிறுவர்களுக்கு உதவ மறுப்பு: மனிதநேயமற்ற போலீசாரால் இரண்டு உயிர்கள் பலி

உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூரில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 2 சிறுவர்களை வாகனத்தில் ஏற்றினால், ரத்தக்கறை படிந்துவிடும் எனக் கூறி போலீசார் ஏற்ற மறுத்துவிட்டனர். இதனால் அந்த இரு சிறுவர்களும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் நடந்துள்ளது.

சஹரான்பூரில் சோட்டியா விகார் பகுதியைச் 10ம்வகுப்பு படிக்கும் அர்பித் குராணா, சன்னி குப்தா ஆகிய இரு சிறுவர்களும் வியாழக்கிழமை இரவு இரு சக்கரவாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினர். இருவரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு சாலையில் போராடிக் கொண்டு இருந்தனர்.

சாலையில் சென்ற ஒருவர் இதைப் பார்த்து அவசர உதவி எண் 100க்கு அழைப்புச் செய்து தகவல் தெரிவித்தார். இந்த விஷயம் அறிந்து அங்கு வாகனத்தில் வந்த 3 போலீசார் அந்த இரு சிறுவர்களையும் பார்த்தனர்.

அந்த போலீசாரில் ஒருவர் அந்த சிறுவர்கள் உயிருக்கு போராடுகிறார்கள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால், மற்ற இரு போலீசாரும், ‘ வாகனம் புதியது, இதில் ரத்தக் காயத்துடன் இருக்கும் சிறுவர்களை ஏற்றினால், வாகனம் முழுவதும் ரத்தக் கறை படிந்துவிடும். யார் வாகனத்தை சுத்தம் செய்வது. நாம் எங்கே அமர்வது’ எனக் கூறி வாதம் செய்துள்ளார்.

இந்த காட்சியை அருகில்இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துவிட்டார்.

சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றுங்கள் என போலீசாரிடம் அங்கிருந்த மக்கள் மன்றாடியுள்ளனர்.

ஆனால், அதில் ஒரு போலீஸார், வாகனம் அழுக்குபடிந்துவிட்டால், என்ன செய்வது, வேண்டுமென்றால், வேறுவாகனம் வைத்து அதில் இருவரையும் கொண்டுசெல்லுங்கள் எனக் கூறிவிட்டார். இந்த காட்சியும், அந்தவீடியோவில் பதிவானது.

மாற்றுவாகனம் வரவழைக்கப்பட்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும் முன், அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த போலீசார் 3 பேரையும் இடைநீக்கம் செய்து சஹரான்பூர் சரக போலீஸ் போலீஸ் டி.ஐ.ஜி.. உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் இமானுவேல் கூறுகையில், “சிறுவர்களுக்கு உதவாமல் மனிதநேயமற்று நடந்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் பங்கஜ் குமார், மனோஜ் குமார், இந்தர்பால் சிங் ஆகியோர் இடைநீக்கம்செய்யப்பட்டனர். இதுபோன்ற இரக்கமற்ற செயல்களை தாங்கிக்கொள்ள முடியாது. இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x