வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் 4 மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் வெளியானது ‘பத்மாவத்’

வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் 4 மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் வெளியானது ‘பத்மாவத்’
Updated on
2 min read

சர்ச்சைக்குரிய ‘பத்மாவத்’ திரைப்படம் ம.பி.,ராஜஸ்தான், குஜராத், கோவா ஆகிய 4 மாநிலங்கள் தவிர நேற்று நாடு முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு எதிரான நேற்றும் சில மாநிலங்களில் வன்முறை நடந்தது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.

தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பத்மாவத்’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து நாடு முழுவதும் நேற்று வெளியானது. முன்னதாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ராஜஸ்தான், ஹரியாணா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி இத்தடையை உச்ச நீதிமன்றம் நீக்கினாலும் கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் இதை ஏற்காததால் வட மாநிலங்களில் நேற்று முன்தினம் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து ம.பி.,ராஜஸ்தான், குஜராத், கோவா ஆகிய 4 மாநிலங்களில் இத்திரைப்படம் நேற்று வெளியிடப்படவில்லை. பிற மாநிலங்களில் வெளியானது. தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள இடங்களில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படத்தை முதல் நாளில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்படத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. உ.பி. மாநிலம் வாரணாசியில் தற்கொலைக்கு முயன்ற தொண்டர் ஒருவர் தடுக்கப்பட்டார். சீதாபூரில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தாக்கப்பட்டது உட்பட பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்த வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்ச மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் கடமை. உதவிக்கு மத்திய படைகளை அனுப்புவதை தவிர மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. வன்முறையை கட்டுப்படுத்த அதிரடிப் படையை மாநில அரசுகள் ஈடுபடுத்த வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி நேற்று கூறும்போது, “குரு கிராமில் பள்ளிப் பேருந்து மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. இது வெட்கக்கேடானது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியும் ஹரியாணா அரசும் தவறிவிட்டதையே இது காட்டுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும். வன்முறை சம்பவங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

இதனிடையே ‘பத்மாவத்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று அப்படத்தில் நடித்துள்ள நடிகை தீபீகா படுகோன் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக மும்பையில் நேற்று முன்தினம் அவர் கூறும்போது, “மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருக்கிறேன். பல்வேறு எதிர்பார்ப்புகள் கருத்துகளை தாண்டி கடைசியில் ‘பத்மாவத்’ திரைப்படம் வெளியாகிறது. இது கொண்டாடத்துக்கான நேரம். இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று சாதனை படைக்கும்’’ என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இதற்கிடையே ‘பத்மாவத்’ திரைப்பட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக 4 மாநில அரசுகள் மற்றும் கர்னி சேனா அமைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு மனுவை காங்கிரஸ் ஆதரவாளர் தசீன் பூனவாலா தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “வன்முறையை கட்டுப்படுத்த தவறிய ராஜஸ்தான், ஹரியாணா, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரினார்.

மற்றொரு மனுவை வினீத் தண்டா என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “பல்வேறு மாநிலங்களில் ‘பத்மாவத்’ திரைப்பட வெளியீட்டுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுவரும் கர்னி சேனா மற்றும் அதன் நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார். இவ்விரு மனுக்களும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த மனுக்களை வரும் திங்கள்கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in