

புதுடெல்லி: குற்ற வழக்குகள், வருமான வரிச் சோதனையின்போது சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் பறிமுதல் செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஊடக நிறுவனங்களில் சோதனை நடத்தப்படும்போது அங்குள்ள ஊழியர்களின் மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
உரிய விதிமுறைகள் இல்லாமல், மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்வது சரியான அணுகுமுறை இல்லை என்றும், இது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விதிமுறைகளை உருவாக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ் வி ராஜூ நேற்று உச்ச நீதிமன்றத்தில், “புதிய விதிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. புதிய விதிமுறைகளை உருவாக்க குறைந்தது ஒரு மாதமாவது தேவைப்படும். அதுவரையில் சிபிஐ-யின் வழிமுறைகள் பின்பற்றப்படும்” என்று தெரிவித்தார்.
இவ்வழக்குத் தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.