

முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார்.
“மோடி சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு இது நல்லதல்ல” என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறியதாவது:
மோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உத்தர கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, மக்கள் தங்கள் தவறை உணர்ந் திருப்பதையே காட்டுகிறது. குஜராத் மாநிலத்தில் மோடி சர்வாதிகார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர்வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.
மத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போதே பல விவகாரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்கவில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் பற்றியோ ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.
‘மோடி அரசு’ என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய்வது போல் தன்னை சிறப்பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியாதையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மக்கள் பெற்றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.