Last Updated : 05 Jan, 2018 02:58 PM

 

Published : 05 Jan 2018 02:58 PM
Last Updated : 05 Jan 2018 02:58 PM

மக்களவையில் முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் பேசாத மவுலானாக்கள்

மக்களவையில் மொத்தமுள்ள 23 முஸ்லிம் எம்.பி.க்களில் 3 பேர் மட்டுமே முத்தலாக் தடை சட்ட மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். முஸ்லிம்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 3 மவுலானா எம்.பி.க்களும் அதில் பங்கேற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

முத்தலாக் வழக்கத்துக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) மசோதா மக்களவையில் கடந்த 28-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது தொடக்கத்தில் விவாதமும் இறுதியும் வாக்கெடுப்பும் நடைபெற்றது. மக்களவையில் முஸ்லிம் எம்.பி.க்கள் மொத்தம் 23 பேர் உள்ளனர். இவர்களில் 3 பேர் மவுலானாக்கள் ஆவர். இவர்கள் முஸ்லிம்களின் தனிச்சட்டமான ஷரியத் மற்றும் கொள்கைகள் பற்றி நன்கு அறிந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தங்கள் கட்சிகளின் கொள்கைகள் காரணமாக பேசாவிட்டாலும், 3 மவுலானாக்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் ஏமாற்றம் அடையும் வகையில் அந்த மூவரும் விவாதத்தில் பேசாததுடன், வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.

வாக்களிக்காத அன்வர் ராசா

எனினும் மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் மட்டும் விவாதத்தில் மசோதாவை எதிர்த்துப் பேசினர். அதிமுகவின் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யான அன்வர் ராசா, ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவருமான அசாசுத்தீன் உவைஸி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், கேரளாவின் பொன்னானி தொகுதி உறுப்பினர் ஈ.டி.முகம்மது பஷீர் ஆகியோரே இந்த மூவர் ஆவர். இவர்களில் உவைஸி, பஷீர் ஆகிய இருவர் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். அதிமுக நடுநிலை வகித்தமையால் அன்வர் ராசா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மக்களவைக்கு வராத மவுலானாக்கள்

முஸ்லிம்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று மவுலானாக்களில் அஷ்ராருல் ஹக் காஸ்மி, பிஹாரின் கிஷண்கன்ச் தொகுதி எம்.பி. ஆவார். காங்கிரஸின் 46 எம்.பி.க்களில் இவர் ஒருவர் மட்டுமே மவுலானா ஆவார். இவர் தன்னை கட்சி பேச அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். மற்ற இரு மவுலானாக்கள் அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்கட்சியின் தலைவரான மவுலானா பத்ரூத்தீன் அஜ்மல், அவரது சகோதரர் சிராஜுத்தீன் அஜ்மல் ஆகியோர். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்பதால் இவர்களுக்கு முத்தலாக் மசோதா மீது பேசுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும், இவர்கள் இருவரும் அசாமில் முக்கியக் கூட்டம் இருப்பதாக அன்றைய தினம் மக்களவைக்கு வரவில்லை.

ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி எம்.பி.யும் அதன் தலைவருமான பரூக் அப்துல்லாவும் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. முத்தலாக் மசோதா அவரது மாநிலத்திற்கு பொருந்தாது என்பதால் அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

மாநிலங்களவையில் மசோதாவின் நிலை

இதற்கிடையே, மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்தலாக் மசோதாவிற்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மீது கடந்த மூன்று நாட்களாக விவாதம் நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளி செய்து வருகின்றனர். இதை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக உள்ளது. குறிப்பாக, முத்தலாக் கூறும் ஆண்களுக்கான 3 வருடம் ஜாமீன் பெறாத தண்டனையை நீக்க வேண்டி வலியுறுத்தப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரான இன்று அதன் மீதான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x