

விஜயவாடா: ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், ஏழுமலையான் கோயில்நிதியில் ஒரு சதவீதம் திருப்பதிநகர வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேவஸ்தான பட்ஜெட்டில் ஒருசதவீதம் என்பது ரூ.100 கோடிக்கும் மேலாகும். அதன்படி சாலைகள் அமைப்பது, மருத்துவமனைகள் கட்டுவது, சுத்தம்செய்யும் பணிகளை நிர்வகிப்பது போன்றவற்றுக்கு இதுவரை ரூ.100 கோடி வரை திருப்பதி மாநகராட்சிக்கு, திருப்பதி கோயில் சார்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்து சமய அறங்காவல் சட்டம் 111-ன் படி குற்றமாகும். இதனை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கு விசாரணையின் போதுதேவஸ்தானம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிமன்றம், இனி தூய்மை பணிகளுக்கு தேவஸ்தான நிதியை உபயோகிக்க கூடாது. அது மாநகராட்சியின் பணியாகும். இதேபோன்று, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கும் தேவஸ்தானத்தின் நிதியை உபயோகிக்க கூடாது. காண்டிராக்டர்களுக்கு தேவஸ் தான நிதியை வழங்க கூடாது. ஆனால், காண்டிராக்ட் பணி தொடரலாம். இது குறித்து 2 வாரங்களுக்குள் தேவஸ்தானம் விளக்க நோட்டீஸ் வழங்க வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.