Last Updated : 25 Jan, 2018 08:24 AM

Published : 25 Jan 2018 08:24 AM
Last Updated : 25 Jan 2018 08:24 AM

குஜராத்தை போல் ம.பி. தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் ராகுல் காந்தி

குஜராத்தில் கடைப்பிடித்தது போல் மத்திய பிரதேச தேர்தலில் வியூகம் அமைத்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கு இது முன்னோட்டமாக பார்க்கப் படுகிறது. குஜராத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்தது. இதற்கு அம்மாநிலத்தின் முக்கிய சமூக தலைவர்களான ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் மற்றும் பொதுநலவாதிகள் சிலரை காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்ததே காரணம். அதே பாணியில் ம.பி.யிலும் பிரச்சாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

ம.பி.யில் 3-வது முறையாக பாஜக ஆட்சி செய்கிறது. மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழல், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அரசுக்கு ஒரு பின்னடைவாக உள்ளது. இந்த ஊழலை முதல்முதலில் வெளிக்கொண்டு வந்த பாராஸ் சக்லேஜாவிடம் ராகுல் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ம.பி.யின் மனித உரிமை ஆர்வலர் அஜய் துபே, விவசாய போராட்டத் தலைவர்களான இர்பான் ஜாப்ரி, விநாயக் பரிஹார், ஏழைகளின் வழக்கறிஞர் அஜய் குப்தா, பழங்குடி மக்களின் தலைவர் ஹீரா ஆழ்வா, தலித் ஆதரவாளர் தேவஷிஷ் ஜராரியா உட்பட பலரிடமும் பேச்சு நடந்து வருகிறது.

இவர்களில் பரிஹார், பாஜக வின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் முன்னாள் செயலாளர். இவர் சவுகான் ஆட்சியில் சட்டவிரோத மாக நடைபெறும் சுரங்கம், மணல் மற்றும் குவாரிகளைத் தடுக்கப் போராடி வருகிறார். இவர்கள் அனைவரையும் காங்கிரஸ் தனக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறக்க முயன்று வருகிறது. இவர்களுடன் குஜராத்தின் சமூக தலைவர்கள் ஹர்திக், மேவானி, அல்பேஷ் ஆகியோரும் ம.பி.யில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

ம.பி.யில் கடந்த 2003-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இந்தமுறை தனது பிரச்சாரத்தில் அப்பகுதி தலைவர்களை தீவிரமாக களம் இறக்குகிறது. ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், அர்ஜுன் சிங் மகனான அஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்களான கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இதில் இடம்பெறுகின்றனர். இங்கு முதல்வர் வேட்பாளராக சிந்தியாவை அறிவிக்கவும் ராகுல் திட்டமிட்டு வருகிறார். இப்பதவிக்கு கமல்நாத்தும் முயன்று வருகிறார். இவர் களுடன் ராகுலும் தீவிர பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்க உள்ளார். எனவே குஜராத்தை போல் ம.பி.யிலும் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x