

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ், சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் முதல்வர்களாக நேற்று பொறுப்பேற்றனர். மொத்தம் 230 உறுப்பினர்களை கொண்ட ம.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக முன்னெப்போதும் இல்லாத வகையில் 163 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
இதையடுத்து போபாலில் பாஜகஎம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சிவராஜ் சிங் சவுகான் மீண்டும்முதல்வராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் உஜ்ஜைனி தக்சின் தொகுதி எம்எல்ஏ மோகன்யாதவ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் புதிய அரசின் பதவியேற்பு விழா போபால் நகரில் உள்ள லால் பரேடு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ம.பி.யின் புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து, துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா, ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஓபிசி தலைவரும் 3-வது முறை எம்எல்ஏவுமான மோகன் யாதவ் தனது 58-வது வயதில் ம.பி. முதல்வராக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானின் நீண்டகால ஆதிக்கத்தை உடைத்துள்ளார். மோகன் யாதவின் எதிர்பாராத நியமனம், மாநிலத்தின் மக்கள் தொகையில் 48 சதவீதத்திற்கு மேல் இருக்கும் ஓசிபி சமூகத்தினரை ஈர்க்கும் பாஜகவின் நடவடிக்கையாக கருதப்படுகிறது. இளமைப் பருவத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய இவர் இந்துத்துவா நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற வர். அனுபவம் வாய்ந்த அரசியல் வாதியான இவர், முந்தைய சிவராஜ் சிங் சவுகான் அரசில் உயர்கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
கடந்த 1982-ல் உஜ்ஜைனியில் உள்ள மாதவ் அறிவியல் கல்லூரி மாணவர் பேரவையின் இணைச் செயலாளராக இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது, பின்னர் 1984-ல் மாணவர் பேரவை தலைவரானார். 2013-ல் உஜ்ஜைனி தெற்கில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய பிரதேச சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்டமுக்கியப் பதவிகளை வகித்துள்ளார். 2018 மற்றும் 2023-ல் மீண்டும்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்த மோகன்யாதவ், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக உறுதி யளித்தார்.
சத்தீஸ்கர் புதிய முதல்வர்: ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் சத்தீஸ்கர் புதிய முதல்வராக விஷ்ணு தியோ சாய் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதல்வருடன், விஜய் சர்மா, அருண் சாவோ ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். 59 வயதாகும் விஷ்ணு தியோ சாய், மாநில பாஜக தலைவராக 3 முறையும் மக்களவை எம்.பி.யாக 4 முறையும் பதவி வகித்தவர். வழக்கறிஞரான இவர், சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு லார்மிதொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள மாநில பாஜக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் 54 புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற கட்சியின் தலைவராக விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார்.
பழங்குடியினத்தை சேர்ந்தவர்: விஷ்ணு தியோ சாய், சத்தீஸ்கரின் முதல் பழங்குயின முதல்வர் ஆவார். சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கான 29 தொகுதிகளில் 17-ல் பாஜக வெற்றி பெற்றது. இரு மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.