Published : 03 Jan 2018 05:40 PM
Last Updated : 03 Jan 2018 05:40 PM

புளூவேல் விளையாட்டால் தற்கொலை: ஆதாரம் இல்லை என்கிறது மத்திய அரசு

புளூவேல் விளையாட்டால் யாரும் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணைய உலகில் திடீரென முளைத்த புளூவேல் விளையாட்டு, இளம் வயதினர் மத்தியில் தற்கொலை உணர்வை தூண்டும் தன்மை கொண்டதாக கூறப்பட்டது. பல சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்ததால் பல்வேறு மாநில அரசுகளும் இதற்கு தடை விதித்தன.

நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து இதுகுறித்த வழக்கை விசாரித்தன. புளூவேல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்றன. இந்நிலையில், புளூவேல் விளையாட்டு தொடர்பாக மக்களவையில் இன்று (புதன்) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறியதாவது:

‘‘பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தன. இதுதொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டோம்.

இதை தொடர்ந்து இந்திய கம்ப்யூட்டர் அவசரகால பதில் நடவடிக்கை குழுவின் பிரதிநிதி தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, புளூவேல் விளையாட்டின் விபரீதம் தொடர்பாக ஆய்வு நடத்தியது. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுவதாக கூறப்படுவது பற்றி இந்த கமிட்டி விரிவான ஆய்வு மேற்கொண்டது.

புளூவேல் விளையாட்டு தொடர்பான தடயவியல் சான்றுகள் குறித்து ஆய்வு செய்தது. எனினும் இதுபோன்ற தற்கொலை சம்பவங்களில் அதற்கு புளூவேல் விளையாட்டு தான் காரணம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x