சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விஷ்ணு தியோ சாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக அருண் சாவோ மற்றும் விஜய் ஷர்மா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அனைவருக்கும் ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பெகல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஷ்ணு தியோ சாய் பின்னணி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குன்குரி தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணு தியோ சாய் 87,604 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2020 முதல் 22 வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக இருந்த இவர், நரேந்திர மோடி அமைச்சரவையில் சுரங்கம், இரும்பு துறைகளின் இணை அமைச்சராக இருந்துள்ளார். 1999 முதல் 2014 வரை 4 முறை ராய்கர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in