மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை

மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல், துபாயில் உள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். இன்டர்போல் மூலமாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள ரெட் நோட்டீஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவி உப்பல் கடந்த வாரத்தில் துபாயில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அந்நாட்டுப் போலீஸாருடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவர் சத்தீஸ்கரின் பிலாய்பகுதியில் பழச்சாறு கடை நடத்திவந்தார். இவர் நண்பர் ரவி உப்பால். இவர் டயர் கடை நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இருவரும் துபாய் சென்றனர். அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில் துபாயில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி குறித்தும் அந்த செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்த அமலாக்கத் துறை, மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுகளுக்காக இந்த பணம் பெறப்பட்டது எனவும் அமலாக்கத் துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மற்றும் மும்பை போலீஸாருடன் மகாதேவ் சூதாட்ட செயலி மூலம் நடந்த பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையின் வேண்டுகோளின் படி இன்டர்போல் போலீஸார் ரெட் நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in