

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் கட்சி இருக்கும்போது, இந்தியாவில் பணம் கொள்ளை பற்றிய கதைகள் யாருக்கு வேண்டும்?’’ என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., தீரஜ் சாகுவுக்கு சொந்தமான மதுபான ஆலை தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையில் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையில் ரூ.350 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணங்கள் பீரோக்களிலும், பர்னிச்சர்களில் கட்ட கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாட்டில் வருமானவரித்துறையின் மிகப் பெரியளவில் ரொக்கப் பணத்தை கைப்பற்றியதை இதுவே முதல் முறை.
இந்நிலையில், கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த படங்கள் ஊடகங்களில் வெளியாயின. அவற்றையும், எம்.பி. தீரஜ் சாகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருடன் இருக்கும் படங்கள் ஆகியவற்றை யும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டு கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். ‘‘காங்கிரஸ் கட்சி இருக்கும்போது, நாட்டில் பணம் கொள்ளை பற்றிய கதைகள் யாருக்கு வேண்டும். அதன் கொள்ளை 70 ஆண்டு பாரம்பரியமிக்கது. அது இன்னும் நடைபெறுகிறது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.