Published : 12 Dec 2023 05:10 PM
Last Updated : 12 Dec 2023 05:10 PM

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு - தொடரும் பாஜகவின் ‘புதிய முகம்’ வியூகம்!

பஜன்லால் ஷர்மா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இதையடுத்து, முதல்வர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, எம்.பி.யாக இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலக்நாத், கிரோரி லால் மீனா, தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன.

இந்நிலையில், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோக் பாண்டே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக, அதாவது முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜன்லால் ஷர்மா, ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சங்கானெர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்டித்து முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மற்றம் மத்தியப் பிரதேசங்களில் இதற்கு முன் முதல்வராக இருந்தவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் விஷ்னு தியோ சாயும், மத்தியப் பிரதேசத்தில் மோன் யாதவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில், ராஜஸ்தான் முதல்வராகவும் புதிய முகம் தேர்வாகி உள்ளார்.

ம.பி. புதிய முதல்வர் -முன்னதாக, மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கடந்த 1965-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி மோகன் யாதவ் (58) பிறந்தார். சட்டம் படித்துள்ள இவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றிய இவர், பாஜக மாணவரணியிலும் (ஏபிவிபி) முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் உஜ்ஜயினி தக்சின் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். அதன் பிறகு 2018 மற்றும் 2023 தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் உயர் கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சீமா யாதவ் என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

சத்தீஸ்கரில்... - சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரையில், புதிய முதல்வராக பழங்குடியின தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டார். 59 வயதாகும் விஷ்ணு தியோ, பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பால் மிகவும் விரும்பப்படுபவர். மேலும், மாநிலத்தின் செல்வாக்கு மிகுந்த பாஜக தலைவரான முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் எஃகு துறை இணை அமைச்சாராகவும், 16-வது மக்களவையில் சத்தீஸ்கரின் ராய்கர் தொகுதி எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார். கடந்த 2020 - 2023-ல் சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் விஷ்ணு தியோ சாய் இருந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x