“அமித் ஷா வரலாறு தெரியாதவர்” - நேரு மீதான விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதிலடி

அமித் ஷா, ராகுல் காந்தி | கோப்புப் படங்கள்
அமித் ஷா, ராகுல் காந்தி | கோப்புப் படங்கள்
Updated on
1 min read

டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை விமர்சித்த நிலையில், “அவர் வரலாறு தெரியாதவர்” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்..

நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் அமித் ஷாவின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''பண்டித ஜவஹர்லால் நேரு நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்; பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். அமித் ஷாவின் பேச்சு, அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க மாட்டேன். வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்.

நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை திசை திருப்பவே ஜவஹர்லால் நேரு குறித்து அமித் ஷா விமர்சித்துள்ளார். தற்போதைய சூழலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை விஷயம். நாட்டின் செல்வங்கள் எங்கே யாருக்கு செல்கின்றன? ஆனால், இந்த விஷயம் குறித்து பேச அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது'' என்று ராகுல் காந்தி கூறினார்.

அமித் ஷா பேசியது என்ன? - நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது குறிப்பிட்ட ஒரு நபரால் (நேரு) தாமதமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீரில் திடீரென சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது.

370-வது சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 3 குடும்பங்கள் மட்டுமே பலன் அடைந்து வந்தன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்துவிட்டன. கல்வீச்சில் ஈடுபட்டவர்களின் கையில் நாங்கள் லேப்டாப்களை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி, அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று அமித் ஷா பேசியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in