

நாக்பூர்: அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே வரவேற்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோது அதை நாங்கள் ஆதரித்தோம். அடுத்த செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையும் வரவேற்கிறோம். ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெறும், மக்கள் சுதந்திரமான சூழலில் வாக்களிக்க முடியும் என நம்புகிறோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளும் விரைவில் ஜம்மு காஷ்மீருடன் இணைக்கப்படும் என நம்புகிறோம், இதனால் நமது நாட்டின் பிரிக்க முடியாத பகுதியான கிரேட்டர் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும். உத்தரவாதம் என்ற வார்த்தை இப்போது பிரபலமாகிவிட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள் தற்போது தாயகம் திரும்பி தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா என அறிய விரும்புகிறோம்” என்றார்.