Published : 12 Dec 2023 04:32 AM
Last Updated : 12 Dec 2023 04:32 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவில் திருத்தங்கள் செய்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதே நாளில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க வகை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில், நாடாளுமன்ற பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2019 ஆகஸ்ட் 9-ம் தேதி, ஜம்மு காஷ்மீரை 2 யூனியன்பிரதேசமாக பிரிக்க வகை செய்யும்காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உதயமாகின.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 9 பேர் மனுக்களை வாபஸ்பெற்றனர். இறுதியாக 23 பேரின் மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. முதலில் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 2019 ஆகஸ்ட் 28-ம் தேதி5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தீவிரம் அடைந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த், கிஷண் கவுல், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், கோபால் சுப்பிரமணியம், ஜாபர் ஷா, ராஜீவ்தவாண், துஷ்யந்த் தவே, நித்யா ராமகிருஷ்ணன், கோபால் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் வாதாடினர்.
‘‘கடந்த 1947-ல் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் - மத்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது சட்டப் பிரிவு 370-ன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே காஷ்மீருக்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். சட்டப்பேரவையின் ஒப்புதல்இல்லாமல் 370-வது சட்டப் பிரிவில் குடியரசுத் தலைவர் திருத்தம் செய்தது சட்டவிரோதம். சட்டப் பிரிவு 3-ன்படி, ஏற்கெனவே மாநில அந்தஸ்தில்இருக்கும் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியாது’’ என்று வாதிட்டனர்.
மத்திய அரசு விளக்கம்: மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர். மத்திய அரசுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ராகேஷ் திவேதி, கிரி, குருகிருஷ்ணகுமார், அர்ச்சனா உள்ளிட்டோரும் வாதாடினர்.
‘‘காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது. இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதை, இதை வரையறுத்த சட்ட நிபுணர்கள் தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளனர். எந்தவொரு முடிவை எடுக்கவும் குடியரசுத் தலைவருக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எல்லைபகுதி என்பதால் தற்காலிகமாக யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’’ என்று வாதிட்டனர்.
3 விதமான தீர்ப்புகள்: இந்நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். நீதிபதி கிஷண் கவுல்மாற்று கருத்துகளுடன் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி சஞ்சீவ் கன்னா 2 வகையான தீர்ப்புகளையும் ஆமோதித்தார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தலைமை நீதிபதி சந்திரசூட் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டும், மூன்றும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்க கூடாது என்ற மனுதாரர்களின் கருத்து நிராகரிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தாலும் மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
1947-ல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த காஷ்மீர் மகாராஜா ஹரிசிங், இந்திய அரசமைப்பு சாசனத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார். போர் சூழல்காரணமாகவே காஷ்மீருக்கு சிறப்புஅந்தஸ்து வழங்கப்பட்டது. வரலாற்றைபடித்தால் 370-வது சட்டப் பிரிவு தற்காலிகமானது என்பது தெளிவாகிறது. அதில் குடியரசுத் தலைவர் திருத்தம் செய்தது செல்லும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும். இதற்கு காஷ்மீர் சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவையில்லை.
‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது தற்காலிகமானது. விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, யூனியன்பிரதேசமாக மாற்றப்பட்டது சட்டப்பூர்வமா, இல்லையா என்ற வாதம் தேவையற்றது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் பிரிவு 3-ன்படி ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வழிவகை உள்ளது. இதன்படி லடாக், யூனியன்பிரதேசமாக மாற்றப்பட்டது சட்டப்பூர்வமாக செல்லும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம்: இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றம் எடுத்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம், வளர்ச்சியின் அனைத்து பலன்களும் ஜம்மு காஷ்மீர் மற்றும்லடாக் பகுதி மக்களை வந்தடையும். 370-வது சட்டப் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்த நலிவுற்ற, ஒடுக்கப்பட்ட பிரிவினர் அனைத்து பலன்களும் பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT