

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டி தமிழக அரசுஉச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் தன்னிடம் இருந்த 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றிய தமிழக அரசுஅதை 2-வது முறையாக ஆளுநருக்கு அனுப்பியது. அவற்றைஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இச்சூழலில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கோவையைச் சேர்ந்த சிக்கந்தர், ரியாசுதீன் உள்ளிட்ட 3 பேர் விடுதலை தொடர்பான கோப்பு மீது ஆளுநர் முடிவுஎடுக்காததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீண்டகாலமாக சிறையில் உள்ள 3 சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் மீது எப்போதுதான் முடிவு எடுப்பீர்கள் என ஆளுநருக்கு கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசு அனுப்பிய கோப்புகளின் தற்போதைய நிலை,அந்த கோப்புகள் மீது ஏன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். இந்த கோப்புகளின் நிலைதொடர்பாக ஆளுநர் தரப்பில் பிப்.2-க்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், சிறைவாசிகள் விடுதலை தொடர்பான விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.