‘சட்டப்பிரிவு 370 ரத்து’ தீர்ப்பு முதல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.11, 2023

‘சட்டப்பிரிவு 370 ரத்து’ தீர்ப்பு முதல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சர்ச்சை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ டிச.11, 2023
Updated on
3 min read

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்கள்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.

“காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும்”- நீதிபதி எஸ்.கே.கவுல்: சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தீர்ப்பின் இறுதியுரையை வாசித்தார். அப்போது அவர், “காஷ்மீரின் காயங்கள் ஆற வேண்டும். காஷ்மீர் மக்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்துவிட்டனர். அங்கு நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மோடி, அமித் ஷா வரவேற்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கூறும்போது, “சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும் இருக்கிறது. அதோடு வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, "காஷ்மீர் பகுதி முழுவதும் இப்போது மெல்லிசை எதிரொலித்து கலாச்சார சுற்றுலா நடைபெறுகிறது. ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைந்துள்ளது. பாரதத்துடனான ஒருமைப்பாடு வலுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் எங்கள் அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் பகுதியில் நிரந்த அமைதியை ஏற்படுத்தவும், அப்பகுதி முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்துவும் உறுதி எடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

”இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். மத்திய அரசு என்ன செய்ததோ அது சட்டப்படி செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு விரைவாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் கூறியுள்ளார்.

“சோகம், துரதிர்ஷ்டம், ஏமாற்றம்தான். ஆனால்...”: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இது சோகமானதும், துரதிர்ஷ்டவசமானதும் ஆகும். இந்தத் தீர்ப்பினால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றாலும், நாங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி “ஜம்மு காஷ்மீர் மக்கள் நம்பிக்கை இழக்கவோ, விட்டுக்கொடுக்கவோ போவதில்லை. கண்ணியம், மரியாதைக்கான எங்களின் போராட்டம் சமரசமின்றித் தொடரும். இது எங்கள் பாதையின் முடிவு இல்லை. இந்தியா என்ற சித்தாந்தத்தின் தோல்வியே இது” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா, "ஏமாற்றம்தான். ஆனாலும் மனம்தளரவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். பாஜகவுக்கு இங்கே வர பல தசாப்தங்கள் ஆகின. நாங்களும் நீண்ட தூர பயணத்துக்கு தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

2015 vs 2023: மீவெள்ள நிவாரணத்தை ஒப்பிட்ட அமைச்சர்: “2015 வெள்ளத்தின்போது மத்திய அரசிடமிருந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கோரிய நிவாரணத் தொகை ரூ.10,250 கோடி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போது வழங்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.5,000. ஆனால், தற்போது மத்திய அரசிடம் ரூ.5,060 கோடி மட்டுமே கோரியுள்ள தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ.6,000 அறிவித்துள்ளது” என்று தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சர்ச்சை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், இறந்தே பிறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிணவறை பணியாளர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி கூறுகையில், “இறந்த குழந்தையை பிணவறையில் இருந்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இச்சம்பவம் தொடர்பாக, குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரிடமும் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. இறந்தே பிறக்கும் குழந்தைகளின் உடலை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

நடந்தது என்ன? - குழந்தையின் தந்தை விளக்கம்: குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஒப்படைத்த சம்பவத்தில் நடந்தவற்றை அக்குழந்தையின் தந்தை மசூத் விவரித்துள்ளார். அவர் கூறுகையில் "மின்சாரம் இல்லாததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பெண் காவல் அதிகாரி அனுப்பி வைத்தார். அதேபோல், குழந்தையை அட்டைப் பெட்டியில்தான் தர வேண்டும். காரணம், இறந்து பிறந்த குழந்தை என்பதால், தூக்க முடியாது. அதேபோல், குழந்தையை துணியில் சுற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தரவில்லை.

மேலும், வெளியாள் ஒருவர் 2500 ரூபாய் கொடுத்தால், குழந்தையை துணியில் சுற்றித் தருவதாக கூறினார். மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் யாரும் என்னிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறவில்லை. மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த ஒருவர்தான் 2500 ரூபாய் கொடுத்தால், வேலை நடக்கும் என்று கூறினார். நான் அவரை இந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர் என்று நினைத்துதான் இந்த விசயத்தை கூறினேன். அந்த நபர் வெளியாள் என்று தெரிந்திருந்தால், இதுகுறித்து நான் கூறியிருக்கவே மாட்டேன். மற்றபடி மருத்துவமனை பணியாளர் மீது தவறு எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி மனு: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்காமல், வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி-யின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் திங்கள்ழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in