நாதுராமின் கூட்டாளி ராஜஸ்தானில் கைது: சென்னை கொளத்தூர் கொள்ளைக்கு திட்டம் தீட்டியவர்

நாதுராமின் கூட்டாளி ராஜஸ்தானில் கைது: சென்னை கொளத்தூர் கொள்ளைக்கு திட்டம் தீட்டியவர்
Updated on
1 min read

சென்னை, கொளத்தூர் கொள்ளையில் நாதுராமிற்கு திட்டம் தீட்டிக் கொடுத்த பக்தாராம் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

இவரை சென்னை போலீஸ் ராஜஸ்தானில் கைது செய்தனர். நாதுராம் மற்றும் தினேஷ் ஜாட்டுடன் சேர்த்து பக்தாராமையும் சென்னை அழைத்துச் சென்றுள்ளனர்.

யார் இந்த பக்தாராம்?

கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடிக்க நாதுராமிற்கு திட்டம் வகுத்து கொடுத்தவர் பக்தாராம் என்பது தெரியவந்துள்ளது. இவர், ஜெய்தாரனின் மூர்காசனி கிராமவாசியான பகாராம் குஜ்ஜர் என்பவரின் மகன் ஆவார்.

இவர் கொளத்தூர் கொள்ளை வழக்கில் சென்னை போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். சென்னை போலீஸாரால் ஜெய்தாரனில் கைது செய்யப்பட்டார். பிறகு ஜெய்தாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நாதுராமின் நண்பரான பக்தாராம், நோட்டம் பார்த்து கொள்ளையடிக்கத் திட்டம் வகுத்து கொடுப்பதில் வல்லவர் எனக் கருதப்படுகிறது.

இவர்தான் கொளத்தூரில் முகேஷ்குமார் ஜெயின் என்பவருக்கு சொந்தமான மகாலட்சுமி நகைக்கடையில் வெளியில் இருந்தபடி கொள்ளைக்கு முன்பாக பல நாட்களாக நோட்டம் பார்த்துள்ளார். பிறகு நாதுராமிற்கு போன் செய்து ஜெய்தாரனில் இருந்து வரவழைத்து கொள்ளைக்கானத் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். இத்துடன் பக்தாராமும் கொள்ளையில் உதவியுள்ளார்.

சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட தினேஷ் ஜாட்..

கொளத்தூர் கொள்ளையில் ஈடுபட்ட தினேஷ் ஜாட்டையும் சென்னை போலீஸார் ஜோத்பூரில் இருந்து அழைத்து சென்றனர். ஜோத்பூர் சிறையில் இருந்த தினேஷ் ஜாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். நாதுராமை போல் தினேஷுக்கும் கைது உத்தரவு சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 13-ல் ஜோத்பூரில் கொள்ளையடிக்க முயன்றதாக தினேஷ் ஜாட் கைது செய்யப்பட்டார்.

கொளத்தூர் கொள்ளை சம்பவத்தில் மற்றொரு முக்கிய குற்றவாளியான தீபாராம் ஜாட் இன்னும் சிக்காமல் உள்ளார். இவரை ஜெய்தாரன் மற்றும் சென்னை போலீஸார் தேடி வருகின்றனர். நாதுராமை பிடிக்க ஜெய்தாரனின் ராமாவாஸ் கிராம பண்ணை வீட்டில் சென்னை போலீஸார் டிசம்பர் 12-ல் முற்றுகையிட்டனர். அப்போது நாதுராமுடன் அங்கிருந்த தீபாராம் தப்பிச் சென்றுவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in