பாலின வன்முறைகளுக்கு எதிராக போராட மாணவர்களுக்கு பயிற்சி: மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

பாலின வன்முறைகளுக்கு எதிராக போராட மாணவர்களுக்கு பயிற்சி: மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

பள்ளிகளில் நிகழும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக போராடுவதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு குறிப்பிட்ட பாலினம் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் அல்லது சில குறிப்பிட்ட பாலினங்களைச் சேர்ந்தவர்களை இவ்வாறுதான் நடத்த வேண்டும் என்கின்ற தவறான எண்ணங்களின் அடிப்படையிலேயே பாலின வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. பாலியல் சார்ந்த அச்சுறுத்தல்கள், உடல், மன ரீதியிலான தொந்தரவு ஆகியவை இதில் அடங்கும். பள்ளிகளில் நிகழ்த்தப்படும் இத்தகைய பாலியல் அடிப்படையிலான வன்முறைகளால், ஆண் - பெண் பாகுபாடின்றி லட்சக்கணக்கான மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, அவர்களின் கல்வியிலும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாலின வன்முறைகளை ஒழிப்பது மட்டுமே, பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான பாதுகாப்பான மற்றும் பாரபட்சமற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கும். ஆதலால், பாலின வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடவும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யுனேஸ்கோ சார்பில் தயாரிக்கப்பட்ட வாசகங்களையும் உங்களுக்கு (மாநில அரசுகள்) அனுப்பியுள்ளோம். தேவைப்படும்பட்சத்தில், பிராந்திய மொழிகளில் இந்த வாசகங்களை மொழி பெயர்த்து அனுப்பவும் மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in