Published : 09 Dec 2023 05:35 AM
Last Updated : 09 Dec 2023 05:35 AM
சென்னை: ஆதித்யா விண்கலத்தின் சூட் தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர்2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது பல்வேறுகட்ட பயணங்களை கடந்து சூரியனின் எல்-1 பகுதியைநோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. அதற்கான சுற்றுப்பாதையை விண்கலம் ஜனவரி முதல் வாரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
7 ஆய்வுக் கருவிகள்: அதன்விவரம் வருமாறு;- ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஹெல்1ஒஎஸ், ஏபெக்ஸ் ஆகிய சாதனங்கள்கடந்த அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் ஆய்வுப் பணிகளை தொடங்கி தரவுகளை வழங்கி வருகின்றன. தொடர்ந்து சூட் (The Solar Ultraviolet Imaging Telescope-SUIT) எனும் மற்றொரு தொலைநோக்கி கருவியானது நவம்பர் 20-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது சூரியனின் முதல் 2 அடுக்குகளான போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் மற்றும் கதிர் வீச்சு மாறுபாடுகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையே சூட் தொலைநோக்கி வாயிலாக 200 முதல் 400 நானோ மீட்டர் வரையான வெவ்வேறுஅலைநீளங்களில் எடுக்கப்பட்ட முழுமையான புகைப்படங்களின் தொகுப்பு இஸ்ரோ இணையத்தில் (/www.isro.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்கள் டிசம்பர் 6-ம் தேதி எடுக்கப்பட்டவைகளாகும். இந்த தரவுகள் சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT