காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கு தொடர்புடைய ஒடிசா நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனையில் ரூ.200 கோடி பறிமுதல்

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கு தொடர்புடைய ஒடிசா நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனையில் ரூ.200 கோடி பறிமுதல்
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் இதுவரையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாமல் மதுபானங்களை விற்று வந்ததாகவும் இதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் பாலாங்கிர், சம்பல்பூர், சுந்தர்கார்க் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ, ராஞ்சி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா உட்பட இந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாகுவுக்கு தொடர்புடையநிறுவனம் ஆகும். இதனால்,அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஒடிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்தின் அலுவலத்தில் ரூ.200 கோடிகைப்பற்றப்பட்டது. மற்ற இடங்களிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை எண்ணுவதற்கு 36 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் 157 பைகளில் இந்தப் பணம் நிரப்பப்பட்டு லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் 2019-2021 நிதி ஆண்டுகளில் அதன் லாபத்தைக் குறைத்தும் செலவுகளை உயர்த்தியும் கணக்குகாட்டியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகளை வருமான வரித் துறை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.

மோடி உத்தரவாதம்: இதுதொடர்பான செய்தியை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நாட்டு மக்களே இந்தக் கட்டுக்கட்டான பணத்தைபாருங்கள். இந்தத் தலைவர்களின் உரையையும் கேளுங்கள்.மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும், அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும். இது மோடியின் உத்தரவாதம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in