Published : 08 Dec 2023 06:54 PM
Last Updated : 08 Dec 2023 06:54 PM
புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசியளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகவினர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வெள்ளிக்கிழமை) புதுடெல்லியில் உள்ள புராரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) தேசிய மாநாட்டைத் தொடக்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், “கல்வி என்பது தொழில் வாழ்க்கையை வடிவமைப்பதற்கு மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கூடதான். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழல், வாரிசு அரசியல் முறை, சாதி வெறி ஆகியவை மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது. உலகமே பல்வேறு பிரச்சினைகளுடன் தீர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் சக்திதான் நாட்டின் முதுகெலும்பாகவும், அதன் வளர்ச்சிக்கும் உந்துதலாக உள்ளது” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT