

தெளிவான விதிமுறைகள் இல்லாத நிலையிலும் உறுப்பினர் ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுக்கலாம் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சோம்நாத் சாட்டர்ஜி கூறியதாவது: “மக்களவை யில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதது, ஜனநாயக அமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும். ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைத் தர, மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம் பேரை அந்த கட்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்போது எந்தவொரு கட்சியும், அந்த அளவுக்கு உறுப்பினர்களை பெறாத நிலையிலும், மக்களவைத் தலைவர் தனது தனி விருப்புரிமை யின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக முடிவு செய்யலாம். அரசு நிர்வாகம் முறையாக நடப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவரை நியமிப்பது அவசியம் என கருதுகிறேன்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற காங்கிரஸுக்கு தகுதியில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ள நிலையில், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.