சாமானிய மக்கள் இலவசங்கள் கேட்பதில்லை: மோடி

சாமானிய மக்கள் இலவசங்கள் கேட்பதில்லை:
மோடி
Updated on
1 min read

சாமானிய மக்கள் இலவசங்களையும், கவர்ச்சி அறிவிப்புகளையும் கேட்பதில்லை. அவர்கள்  நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறியது குறித்தும், அவர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் அளித்த பதில்:

''உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் ஆகியோருக்கு இடையே எழுந்துள்ள விவகாரத்தில் நான் சற்று ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். மத்திய அரசு அதில் இருந்து கண்டிப்பாக தலையிடாது. அரசியல் கட்சிகளும் கண்டிப்பாக ஒதுங்கி இருத்தல் வேண்டும்.

நம்முடைய நீதித்துறை என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது, மிகத் திறமையான மனிதர்களை கொண்டது.  அவர்கள் தங்களுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டும்.

2019-ம் ஆண்டு நடக்கும் பொதுத் தேர்தலுக்காக வரும் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்பதை நம்பவில்லை. சாமானிய மக்கள் இலவசங்களையும், கவர்ச்சி அறிவிப்புகளையும் கேட்பதில்லை. அவர்கள் நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு கேட்கிறார்கள் என நாம் கற்பனை செய்து கொள்கிறோம்.

டவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன். இந்தியா சமீபத்தில் அடைந்துள்ள வளர்ச்சி, தொழில் தொடங்க எளிதான நாடுகள் பட்டியலில் 42 இடங்களுக்கு முன்னேறியது குறித்து இந்த மாநாட்டில் நான் எடுத்துக் கூறுவேன். எனக்கு கிடைத்து இருக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன். இந்தியாவின் உண்மையான முகத்தை இந்த உலகம் உறுதியாக பார்க்கப் போகிறது.

என்னுடைய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள்தான் மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீட்டுக்கு தேர்தல்தான் களமாக இருந்தால், நிச்சயம் மிகச் சிறந்த முடிவுகளை மக்கள் எனக்கு வழங்குவார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியுடன் எங்களது ஆட்சியை ஒப்பிடும் போது மக்களுக்கு உண்மை புரிந்துவிடும்.

காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும். சாதியம், வாரிசு அரசியல், ஊழல், அதிகாரத்தை கையில் வைத்து இருத்தல் போன்ற ஆரோக்கியமில்லாத விஷயங்களை அனைத்து கட்சிகளுக்கும் பரப்பிவிட்டது.

மக்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றி வருவது எனக்கு மனநிறைவு அளித்து வருகிறது. சரியான பாதையில் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் எங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகளுக்கு ஏற்ப அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.  அதுதான் மிகப்பெரிய மனநிறைவு.''

இவ்வாறு  பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in