

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் ஓடும் ஜீப்பில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பரிதாபாத் செக்டார் 16 பகுதியில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் 23 வயது இளம் பெண் ஒருவர் தனது அலுவலகப் பணியை முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்றிலிருந்து இறங்கிய 4 பேர் அப்பெண்ணை ஜீப்பினுள் இழுத்துச் சென்றனர். அப்பெண்ணுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் கண் எதிரிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சக ஊழியர்கள், அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க உறவினர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து போலீஸாரும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிக்ரி எனும் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே அந்த இளம் பெண் மீட்கப்பட்டார்.
அவர் அளித்த தகவலின்படி நான்கு பேர் மாறி மாறி அப்பெண்ணை பலாத்காரம் செய்திருக்கின்றனர். பின்னர், ஓரிடத்தில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். இரண்டு மணி ஜீப்பில் இந்தக் கொடூர சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் பூஜா தபால் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.