Published : 05 Dec 2023 06:04 AM
Last Updated : 05 Dec 2023 06:04 AM

சிதறிய கனவு - சிதறுமா கூட்டணி?

கிரிக்கெட் பாணியில் சொல்வதென்றால் செமி-ஃபைனலில் அபார வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட பாஜக, ராஜஸ்தானிலும் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. சத்தீஸ்கரில் பாஜகவினரே எதிர்பாராத வெற்றி எனலாம். தெலங்கானாவில் காங்கிரஸுக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணியை நிச்சயம் பாதிக்கும் என்றே கூறலாம். இது காங்கிரஸின் தவறுகளால் கிடைத்த தோல்வி என்று மம்தா பானர்ஜியும், இப்படியே போனால் இக்கூட்டணி 2024 தேர்தலில் வெல்லமுடியாது என்று ஓமர் அப்துல்லாவும் தெரிவித்திருக்கின்றனர்.

இண்டியா கூட்டணி ஜெயிக்குமா என்பதைவிட இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதுதான் கேள்வி. பரஸ்பரம் இழப்புதான் என்று தெரிந்தும் ஒரு கூட்டணி அமைகிறது என்றால், அது இண்டியா கூட்டணியாகத்தான் இருக்கமுடியும்.

இந்தக் கூட்டணியில் தமிழகத்தில் திமுகவுக்கும், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கும் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் காங்கிரஸால் பெரிய பலனில்லை. ஆனால்பாதிப்புகள்தான் அதிகம்.

மேற்கு வங்கத்தில் 2021-ல் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த திரிணமூல் காங்கிரஸ். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி அலையையும் மீறி கணிசமான இடங்களை வென்றது. ஆக,காங்கிரஸுடன் கூட்டணி இல்லாமலேயே வெற்றியடையக் கூடிய திரிணமூல், கூட்டணி சேர்த்துக் கொண்டால் கணிசமான இடங்களை காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் வழங்க வேண்டியிருக்கும்.

மும்முனைப் போட்டிஎன்பது இருமுனைப் போட்டியானால் அது பாஜகவுக்கே பலனளிக்கும் என்பதும் மம்தாவுக்குத் தெரியும். அதனால் கூட்டணியின்றி வெற்றி பெறும் தொகுதிகளை விடவும் கூட்டணி வைத்தால் குறைந்த தொகுதிகளையே வெல்லும் சூழல் திரிணமூல் காங்கிரஸூக்கு ஏற்படலாம்.

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை அது டெல்லி, பஞ்சாப் இங்கெல்லாம் காங்கிரஸின் வாக்கு வங்கியைக் கவர்ந்துதான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. குஜராத்,கோவா போன்ற பல மாநிலங்களில் போட்டியிட்டாலும் அங்கெல்லாமும் காங்கிரஸின் வாக்குகளைத்தான் சிதறடிக்கிறது ஆம் ஆத்மி. இந்நிலையில் இவை இரண்டும் ஒரே அணியில் என்பது நகைமுரணல்லவா?

உத்தர பிரதேசம், பிஹார் இங்கெல்லாம் காங்கிரஸின் செல்வாக்கு என்பது காணாமல் போன ஒன்று. இந்த நிலையில்தான் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிஇந்தக் கூட்டணிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் தொகுதி உடன்பாடு அல்லது யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விகளெல்லாம் இப்போது தேவையில்லையென்று காங்கிரஸ் கூறி வந்தது.

சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பற்றி பேசினால் அதிக தொகுதிகளைப் பெறலாம் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம் என்பது மாநிலக் கட்சிகளுக்கும் தெரியும். குறைந்தபட்சம் மத்தியப் பிரதேசத்தை பாஜகவிடமிருந்து கைப்பற்றினாலே அது காங்கிரஸின் மேலாதிக்கத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியும்.

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவை யாரெனக் கேட்டார் கமல்நாத். குறைந்தபட்சம் 5 தொகுதிகளையாவது ஒதுக்குங்கள் என்று அகிேலஷ் யாதவ் கேட்டதற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் கமல்நாத்.

சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகள் சிறுபான்மை வாக்குகளைப் பெரிதும் நம்பியுள்ளன. காங்கிரஸ் வலுவிழந்ததால் இந்த வாக்கு வங்கி மாநிலக் கட்சிகள் பக்கம் திரும்பியது. மீண்டும் காங்கிரஸ் வலுவடைந்தால் சிறுபான்மை வாக்குகள் காங்கிரஸ் பக்கம் திரும்பினால் அது மாநிலக் கட்சிகளைத்தான் பெரிதும் பாதிக்கும். இதுதான் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பரஸ்பர இழப்பு.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாஜக புலனாய்வு அமைப்புகளை ஏவி விடுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு எதிராகவே ரெய்டு நடவடிக்கைகள் நடந்தனஎன்பதும், திமுக தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்தனர் என்பதும் எதிர்க்கட்சிகள் மறந்திருக்க முடியாது.

ஆனால் இப்போது பாரத் ஜோடோ யாத்திரை, அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வெற்றிஇதையெல்லாம் வைத்து காங்கிரஸ் முன்பிருந்த பலமான நிலைக்குத் திரும்புகின்றது போன்றஒரு பிம்பத்தைக் கட்டமைத்தது. மூன்று மாநிலங்களிலும் தோல்விஅடைந்திருப்பதன் மூலம் அந்த பிம்பம் கலைந்துள்ளது.

காங்கிரஸுக்குத்தான் இனி கூட்டணி அவசியம் என்பதால் இனிமேலும் திமுகவை தவிர பிறமாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸுக்கு இடங்களை ஒதுக்குவதற்கு முன்வர மாட்டார்கள். அதே சமயம் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் காங்கிரஸ் செல்வாக்குடன் இருக்கும் மாநிலங்களில் தங்களுக்குத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்கள். இதற்கு காங்கிரஸ் முன்வருமா?

காங்கிரஸால் தங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாநிலக் கட்சிகள் என்று உணரும்போது, இண்டியா கூட்டணி என்பது காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியாக மாறவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக இந்தக் கூட்டணியைத் தொடர நினைத்தாலும் வேறொருசிக்கல் இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சிலரே வெளிப்படையாக திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்புப் பேச்சு தோல்விக்கு ஒரு காரணம் என்று கூற ஆரம்பித்து விட்டனர். அதனால் வட இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணி வேண்டாமென்று நெருக்கடி கொடுக்கலாம்.

இந்நிலையில்அதிக இடங்களை ஒதுக்க திமுக முன்வராவிட்டால், அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரவும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒரு கூட்டணி உருவானால் இன்னும் ஒரு சில சிறிய கட்சிகளும் அணி மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x