சுனந்தா விவகாரம்: டாக்டர் குற்றச்சாட்டுக்கு எய்ம்ஸ் மறுப்பு

சுனந்தா விவகாரம்: டாக்டர் குற்றச்சாட்டுக்கு எய்ம்ஸ் மறுப்பு
Updated on
1 min read

சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானதுதான் என்று அறிக்கை அளிக்குமாறு தன்னை சிலர் வற்புறுத்தியதாக பிரேதப் பரிசோதனையை நிகழ்த்திய டாக்டர் சுதிர் குப்தா குற்றம் சாட்டியிருந்தார்.

இதை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் டெல்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், சுனந்தாவின் மரணம் இயற்கையானதுதான் என்று அறிக்கை அளிக்க சிலர் தன்னை வற்புறுத்தியதாகவும், அதற்கு தான் உடன்படவில்லை என்றும் டாக்டர் சுதிர் குப்தா தெரிவித் திருந்தார்.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை செய்தித்தொடர் பாளர்கள் அமித் குப்தா, நீரஜ் பட்லா புதன்கிழமை கூறியதாவது: “பிரேதப் பரிசோதனை அறிக் கையை மாற்றுமாறு சுதிர் குப்தா வுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பி லிருந்தோ, வெளியிலிருந்தோ நெருக்கடி தரப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை. அவரது குற்றச்சாட்டு தவறானது” என்றனர்.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். சுனந்தா புஷ்கரின் மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் போலீஸ் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் தெரிவித்தார்.

சசி தரூர் கோரிக்கை

இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், பேஸ்புக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், “எனது மனைவி சுனந்தா இறந்த அன்று முதலே, இந்த வழக்கின் விசாரணையை துரிதமாகவும் முழுமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டும் என்று கோரி வருகிறேன். சுனந்தாவின் மரணத்தின் பின்னணி குறித்து தெளிவான, தீர்மானமான முடிவை எட்ட போலீஸார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இது தொடர்பாக கிளப்பிவிடப்படும் சர்ச்சைகள் முடிவுக்கு வரும். போலீஸார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in