ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்?

ஊடகங்களுக்கு பேட்டி: யார் அந்த 4 நீதிபதிகள்?
Updated on
2 min read

இந்திய நீதித்துறையின் வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கூட்டாக ஊடகங்களை சந்தித்துள்ளனர். அத்துடன், உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். அந்த 4 நீதிபதிகள் குறித்த சிறு குறிப்பு பின்வருமாறு:

நீதிபதி செலமேஸ்வரர்

2011-ம் அண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ உள்ளிட்ட முக்கிய வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். ஆதார் தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இவரும் இடம்பெற்றிருந்தார். ஆதார் கட்டாயம் இல்லை; ஆதார் வைத்திருப்பதைக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று தீர்ப்பு வழங்கியவராவார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் செல்லமேஸ்வரர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. ஆந்தரா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று, 1976-ல் பட்டம் பெற்றார். குவாஹாட்டி உயர் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரஞ்சன் கோகோய்:

இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த 2010 செப்டம்பரில் பஞ்சாப், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். 2011-ல் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். பின்னர் 2012, ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

கடந்த 2016-ம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்.கேஹாரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரி அளித்த வாக்குமூலத்தை விசாரித்த அமர்விலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

நீதிபதி குரியன் ஜோசப்:

1953 நவம்பர் 30-ம் தேதி பிறந்தார். 1979-ல் வழக்கறிஞர் பணியை கேரள உயர் நீதிமன்றத்திலிருந்து தொடங்கினார். 2000-ம் ஆண்டில் அவர் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 மார்ச் 8-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிகிறது.

2014-ம் ஆண்டில் 92 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில், "நீதிபதிகள் நியாயமாக நேர்மையாக பணியாற்றுவதற்கான துணிச்சலை தலைமை நீதிபதியிடம் இருந்து பெறுவதில்லை மாறாக இந்திய அரசியல் சாசனத்தில் இருந்தே பெறுகின்றனர்" என கருத்து கூறினார்.

நீதிபதி மதன் பீமாராவ் லோகூர்:

நீதிபதி மதன் பீமாராவ் லோகூர் டெல்லியைச் சேர்ந்தவர். இவர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றினார். 1998-ல் இந்தியாவின் சொலிசிடர் ஜெனரலாக்கப்பட்டார். 1999-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இவரை கொலீஜியம் பரிந்துரைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in