Published : 07 Jan 2018 04:07 PM
Last Updated : 07 Jan 2018 04:07 PM

சிறுமி ஷெரின் மேத்யூ மரணம் எதிரொலி: அமெரிக்க தத்தெடுப்பு நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து

அமெரிக்காவில் இந்திய சிறுமி ஷெரின் மேத்யூ, வளர்ப்புத் தந்தையால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்கா தத்தெடுப்பு ஏஜென்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது, பேச்சு குறைபாடுடையவர்) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில், ஷெரினை அடித்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, வெஸ்லியும் அவரது மனைவி சினியும் கைது செய்யப்பட்டனர்.ஷெரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக ஷெரினின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.

இதனிடையே, சிறுமி ஷெரினை தத்தெடுக்கப்பட்டபோது, அந்த பணிகளை செய்ய அமெரிக்க தத்தெடுப்பு நிறுவனமான ஹால்ட் இண்டர்நேஷனலுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஷெரின் தத்துக் கொடுக்கப்பட்டபோது, அவரது பெற்றோர் குறித்து மதிப்பிட தவறி விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிப்பவர்கள் இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விரும்பினால், இதற்கான பணிகளை செய்வதற்காக, மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையால் ஏஜென்சியாக, ஹாலண்ட் இண்டர்நேஷனல் நிறுவனம் நியமிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அங்கீகாரம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x