

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடந்த மாவோயிஸ்டுகளுடான என்கவுன்ட்டரில் 2 போலீஸ் துணை ஆய்வாளர்கள், உள்பட 4 போலீஸார் கொல்லப்பட்டனர், 7 பேர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தெற்குப்பகுதி மாவோயிஸ்டுகள் நிறைந்த பகுதியாகும். இவர்களை ஒடுக்கும் பணியில் துணை ராணுவப் படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் அபுஜிமாத் பகுதியில் உள்ள இர்பானார் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடை கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 2 போலீஸ் துணை ஆய்வாளர்கள், 2 போலீஸ் கான்ஸ்டபிள்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்று தப்பினர். 7 போலீஸார் படுகாயமடைந்தனர்.
இது குறித்து நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. தேவ்நாத் கூறுகையில், " மாவோயிஸ்டுகளுடனான என்கவுன்ட்டரில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர், 7 பேர் காயமடைந்தனர். இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.