

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி செல்லமேஸ்வர் இன்று பணிக்கு வரவில்லை. இதனால், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நடைபெறவிருந்த சமரசப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.
இதன்காரணமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகளையும் தனது சேம்பருக்கு (நீதிபதியின் அறை) வரவழைத்தார். சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இன்று நீதிபதி செல்லமேஸ்வர் விடுப்பில் இருப்பதால் இன்றைய சமரச பேச்சில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை, நீதிபதி செல்லமேஸ்வர் வீட்டில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். இவர்களைத் தவிர நீதிபதி யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் செல்லமேஸ்வரை நேற்று மாலை சந்தித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு எப்போது முழுமையாக தீரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.