

இந்தியச் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் 65 சதவீதம் விசாரணைக் கைதிகளே என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் அதிகம் விசாரணைக் கைதிகள் உள்ள மோசமான 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவலை முன்னால் தகவலுரிமை ஆணையர் ஷைலேஷ் காந்தி வெளியிட்டுள்ளார். தேசிய குற்றப்பதிவு கழக்கத்தின் தரவுகளின் படி நாட்டில் 2.5 லட்சம் பேர் விசாரணைக் கைதிகளாகவே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியச் சிறை அதிகாரிகள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்டரீதியாக விடுதலைச் செய்யப்படவேண்டியவர்களைக் கூட சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று இந்திய ஆம்னெஸ்ட் அமைப்பின் தலைமைச் செயலதிகாரி ஜி.அனந்த பத்மநாபன் பெங்களூரில் அரசு சாரா சமூக நல அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
இந்தியச் சிறை அதிகாரிகள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 436 ஏ பிரிவை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இந்தக் கருத்தரங்கில் எழுப்பப்பட்டது. அதாவது ஒருவர் செய்த குற்றம் எவ்வளவு தண்டனையை ஈர்க்குமோ அந்தத் தண்டனைக் கால அளவில் பாதியைச் சிறையில் ஒருவர் கழித்து விட்டால் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் சட்டம் இது. மரண தண்டனையை எதிர்நோக்கும் கைதிகளுக்கு மட்டுமே இது பொருந்தாது.
விசாரணைக் கைதிகளை குறிப்பிட்ட காலம் முடிந்ததும் விடுதலை செய்யாததால் சிறைகளில் கைதிகளின் நெரிசலும், மோதலும் ஏற்படுகிறது என்கிறார் ஷைலேஷ் காந்தி.
கர்நாடகாவில் மட்டும் சிறைக்கைதிகளில் 68% விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 51 சதவீத கைதிகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
மேலும் விசாரணைக் கைதிகளுக்கு அளிக்க வேண்டிய சட்ட உதவிகள் பெரும்பாலும் அளிக்கப்படுவதில்லை என்று கூறுகிறது இந்திய ஆம்னெஸ்டி அமைப்பு.
இந்த விவகாரத்தைக் கவனிக்க விசாரணைக் காவல் மறுசீராய்வுக் குழு உள்ளது. ஆனால் செயலற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இதன் செயலற்றத் தன்மையைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு அறிவிக்கை ஒன்றையும் அனுப்பியது ஆனாலும் விசாரணைக் கைதிகள் விவகாரத்தில் இன்னும் விடிவு ஏற்படவில்லை.