Published : 30 Jan 2018 10:37 AM
Last Updated : 30 Jan 2018 10:37 AM

பரஸ்பரம் புரிதல் இல்லாவிட்டால் கூட்டணி கட்சியை வேற்று கிரகத்தில் தேடும் நிலை பாஜக.வுக்கு ஏற்படும்: சிவசேனாவின் ‘சாம்னா’ தலையங்கத்தில் விமர்சனம்

‘‘தற்போதுள்ள கூட்டணி கட்சிகளை பாஜக புரிந்து கொள்ளாவிட்டால், வேற்று கிரகத்தில் கூட்டணி கட்சிகளைத் தேடும் நிலை பாஜக.வுக்கு ஏற்படும்’’ என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

‘ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிடும்’ என்று கட்சித் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கூறியிருந்தார். மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி உள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

முக்கிய விஷயங்களில் தற்போதுள்ள கூட்டணி கட்சிகளின் எண்ணங்கள், விருப்பங்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளுடன் பரஸ்பர புரிதல் இல்லாமல் பாஜக செயல்பட்டால் இந்தியாவில் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது. அதன்பிறகு வேற்று கிரகத்தில்தான் பாஜக கூட்டணி கட்சிகளைத் தேட வேண்டியிருக்கும்.

பாஜக.வின் உண்மையான முகம், பிரதமர் மோடியின் அலை எல்லாம் அடுத்த பொதுத் தேர்தலின் போது வெளிப்பட்டுவிடும். மகாராஷ்டிராவில் பாஜக.வை சிவசேனா நல்ல முறையிலேயே நடத்தியது. ஆனால், சிவசேனாவுக்கு பாஜக உண்மையாக இல்லை.

பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி கூட பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது. பாஜக.வின் நடவடிக்கையை எதிர்த்து சிவசேனாதான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x