பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பெங்களூருவில் 68 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் சதாசிவநகர், எலஹங்கா, பசவேஸ்வரா நகர்,மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 68 தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில் மும்பை தாக்குதலை போல மிக மோசமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீஸாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கும் தகவல்கொடுத்தனர். மேலும், பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தகவல் அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பீதியுடன் பள்ளிகளுக்கு சென்று பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

போலீஸாரும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக‌ளுக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு போன்ற வெடிக்கும் தன்மைகொண்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இருப்பினும் பெரும்பாலான தனியார் ப‌ள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

கைது செய்ய உத்தரவு: இதனிடையே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்சதாசிவநகரில் மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இதுதொடர்பாக உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in