Published : 01 Dec 2023 07:52 PM
Last Updated : 01 Dec 2023 07:52 PM

“அடுத்த 10 ஆண்டுகளில் 50% பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எர்ணாகுளம்: “அடுத்த 10 வருடங்களில் 50% பெண் முதல்வர்களை உருவாக்குவதே காங்கிரஸின் இலக்கு” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள ராகுல் காந்தி, எர்ணாகுளத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு எம்.பி.யும், கேரள மகிளா காங்கிரஸ் தலைவருமான ஜெபி மாதர் தலைமை வகித்தார். காங்கிரஸ் தலைவர்களான தாரிக் அன்வர், கே.சி. வேணுகோபால், கே.சுதாகரன், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியில் தற்போது ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் பல பெண்கள் சிறந்த முதல்வர்களாக இருப்பதற்கான பண்புகளை கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 50 சதவீத பெண்களை முதல்வர்களாக்க இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஒரு தசாப்தத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவையும் நான் பார்த்ததில்லை. இந்த மசோதா பெண்களின் சக்தியுடன் தொடர்புடையது.

பெண்கள் அதிகார அமைப்பில் அங்கம் வகிப்பதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு வரலாற்றிலும்கூட பெண்களை அதன் அணிகளில் (ranks) அனுமதிக்கவில்லை. இதை நான் எடுத்துக் கூறும்போது, ஆர்எஸ்எஸ் தலைமையிடம் பெண்கள் அமைப்பு இருப்பதாக கூறினார்கள். ஆனால், அவர்களிடம் அத்தகைய அமைப்புகள் உள்ளனவா என்பது கேள்வி அல்ல.

ஆர்எஸ்எஸ்ஸில் பெண்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்களா என்பதுதான் கேள்வி. பெண்கள் ஒழுங்காக உடை அணிந்திருந்தால் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று வலதுசாரி தலைவர்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கட்சிக்கு குறைந்தது 50% பெண் முதல்வர்கள் வருவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார் ராகுல் காந்தி.

இதனிடையே, கேரளாவின் நாளிதழான சுப்ரபாதத்தின் 10-ம் ஆண்டு விழா நடைபெற்றது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, “வெறுப்புச் சந்தையில் அன்பு எனும் கடையைத் திறப்பதுதான் வளர்ச்சி என்பதே வளர்ச்சி குறித்த எனது பார்வை” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x