

புதுடெல்லி: பஞ்சாபின் திரை உலகினரை கூலிப்படையினர் குறிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பஞ்சாப் காவல் துறையின் என்கவுன்ட்டரில் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் வெளியாகி உள்ளது.
கடந்த திங்கள்கிழமை டெல்லி போலீஸார் அங்குள்ள மயூர்விஹார் பகுதியில் ஐந்து பேரை கைது செய்தது. இவர்களில் ராஜா எனும் ராஜ்பிரீத்சிங், விம்மி எனும் வீரேந்தர்சிங் ஆகிய இருவர் டெல்லி போலீஸார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். இந்த இருவரையும் காலில் சுட்டு டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்த ஐந்து பேரும் கனடாவின் தீவிரவாதப் பட்டியலில் இடம்பெற்ற அர்ஷ் தல்லா என்பவரின் கூலிப்படைகள்.இவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் முக்கியமாக பஞ்சாப் திரை உலகினர் கூலிப்படையினரால் குறி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. என்கவுன்ட்டரில் கைதான இருவரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள். இவ்விருவருக்கும் பிரபல பஞ்சாபி பாடகரான எல்லி மாங்கத்தை சுட்டுத் தள்ளும் பணி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இருவரும் அக்டோபரில் எல்லி மாங்கத்தை அவரது பட்டிண்டா வீட்டில் சுட்டுத்தள்ள முயன்று முடியாமல் போனது. பிறகு, மற்றொரு பிரபல பாடகரான பாபு மானை ஜலந்தரின் ஒரு நிகழ்ச்சியில் வைத்த குறியும் தப்பி விட்டது.இதையடுத்து நவம்பர் 25-ல் பஞ்சாபி நடிகரும் பாடகருமான ஜிப்பி கர்வாலை அவரது கனடா வீட்டில் சுட முயன்றுள்ளனர். பஞ்சாப்வாசிகளுக்கு கனடாவில் அதிக நெருக்கம் உள்ளதால் அங்கும் பலர் சொத்துகளை சேர்ப்பது உண்டு.
சல்மானுக்கும் ஆபத்து? - இந்த ஜிப்பி கர்வால், பாலிவுட் படநாயகரான சல்மான் கானுடன் பல படங்களில் நடித்து நெருக்கமாக உள்ளார். இதன் காரணமாக, நடிகர் சல்மான்கான் கூட கூலிப்படைகளின் குறியில் இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சல்மான் கானின் பாதுகாப்பும் மும்பை போலீஸாரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. சல்மானுக்கு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பஞ்சாபி திரை உலகம், தாம் கூலிப்படைகளின் குறியில் சிக்கியிருப்பதாக அச்சத்தில் உள்ளது.
இதனிடையே, பஞ்சாபி பாடகரான மன்கிரத் அவுலாக் என்பவருக்கு தவிந்தே பாம்பியாக் எனும் கூலிப்படையினர் பணம் கேட்டு போனில் எச்சரிக்கப்பட்டுள்ளார். இதுபோல், சிறிதும், பெரிதுமாக பல்வேறு கூலிப்படைகளால் பஞ்சாப் திரை உலகினர் அச்சுறுத்தப்படுவது தொடர்கிறது.இதன் மீது பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான பக்வந்த் மானிடம் புகார் அளித்தும் பலனில்லாமல் உள்ளது. இக்கூலிப்படைகளில் முக்கியமானவர்கள், பஞ்சாபின் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கனடாவில் வாழும் பஞ்சாபியான அர்ஷ் தல்லா ஆகியோர்.
லாரன்ஸ் பிஷ்னோய் டெல்லி போலீஸாரால் கைதாகி திஹார் சிறையில் இருந்தபோதும், அவரது கூலிப்படைகள் தொடர்ந்து பஞ்சாப் பிரபலங்களை குறிவைக்கின்றனர். இந்த பணம்பறிப்புக்கு காரணம், இவர்களுக்கு இடையே உள்ள தொழில் போட்டியாக உள்ளது.இந்த நடவடிக்கைகளில் முதன்முதலாக பஞ்சாபின் பிரபல பாடகரான பர்மிஷ் வர்மா, கூலிப்படைத் தலைவனான தில்பிரீத்சிங் என்பவரால் மொஹலியில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிறகு, சித்து மூஸேவாலா (29) கடந்த வருடம் மே 29-ல் லாரன்ஸ் பிஷ்னோயால் சுட்டுக்கொல்லப்பட்ட போதுதான் பஞ்சாப் திரையுலகினர் குறியில் இருக்கும் தகவல் வெளியானது. இதுபோன்ற செயல்களை தாம்தான் செய்ததாக தம் முகநூல்களில் பெருமையுடன் வெளியிடுவது கூலிப்படைகளின் வழக்கமாகிவிட்டது.