பிரவீன் தொகாடியா மீதான புகார் எதிரொலி: இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றம்- மார்ச் மாதம் ஆர்எஸ்எஸ் நடத்தும் கூட்டத்தில் முக்கிய முடிவு

பிரவீன் தொகாடியா மீதான புகார் எதிரொலி: இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றம்- மார்ச் மாதம் ஆர்எஸ்எஸ் நடத்தும் கூட்டத்தில் முக்கிய முடிவு
Updated on
2 min read

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் கிளை அமைப்புகளில் முக்கிய நிர்வாக மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் தெரிகின்றன. நாக்பூரில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் இந்த மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் கிளை அமைப்புகளில் ஒன்றான விஎச்பி.யின் செயல் தலைவராக பிரவீன் தொகாடியா இருந்து வருகிறார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கிளம்பிய சர்ச்சைகளால் அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. இது குறித்த செய்தி ‘தி இந்து’வில் ஜன. 21-ல் வெளியானது. தொகாடியா சர்ச்சை மீதான விவாதம் அகில பாரத பிரதிநிதி சபையில் (ஏபிபிஎஸ்) நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு அதிகாரம் படைத்ததாக ஏபிபிஎஸ் உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெறும் கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் மார்ச் மாதம் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், ஆர்எஸ்எஸ், அதன் கிளை அமைப்புகளான சுதேசி ஜாக்ரன் மன்ச், பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக இருக்கும் சுரேஷ் பய்யாஜி ஜோஷி (70) அப்பதவியில் இருந்து விலக உள்ளார். ஏனெனில், தொடர்ந்து மூன்றாவது முறையாக அப்பதவியில் வகிக்கும் ஜோஷியின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே அவரது இடத்தில் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான தத்தாத்ரேயா ஹோசபல் அமர்த்தப்படுவார் எனக் கருதப்படுகிறது.

மோடிக்கு நெருக்கம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் தத்தாத்ரேயா, கர்நாடகாவை சேர்ந்தவர். மற்ற இரு துணை பொதுச் செயலாளர்களான சுரேஷ் சோனி, கிருஷ்ண கோபால் ஆகியோருடன் மற்றொருவர் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளார். இதே கூட்டத்தில் சுதேசி ஜாக்ரன் மன்ச், பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியவற்றுக்கும் முக்கிய நிர்வாகிகள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். இதே கூட்டத்தில் பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் சிலர் பரிந்துரைக்கப்பட உள்ளனர். இவர்களை தங்களுக்கு பொருத்தமான பதவிகளில் பாஜக அமர்த்திக்கொள்ளும்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “தொகாடியாவின் பிரச்சினை மீண்டும் சர்ச்சையாக வாய்ப்புள்ளதால் அதில் உடனடி மாற்றம் தேவைப்படுகிறது. எனவே மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே விஎச்பி.யின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று, அதில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இப்பதவியில் ம.பி.யை சேர்ந்த விஷ்ணு சதாஷிவ் கோக்ஜி அமர்த்தப்படலாம்” என்று தெரிவித்தனர்.

வழக்கமாக ஏபிபிஎஸ் கூட்டத்தில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட பின் சம்பந்தப்பட்ட அமைப்பினர் அடுத்த சில தினங்களில் கூடி தங்கள் நிர்வாக மாற்றத்தை அறிவிப்பார்கள். கடந்த 2003 முதல் 2008 வரை இமாச்சலபிரதேச ஆளுநராக இருந்தவர் கோக்ஜி. ம.பி.யில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் 11 மாதங்கள் பதவி வகித்தவர். இவர் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in