சமூக ஊடக தகவலை வைத்து பொது நல வழக்கு தொடுக்க முடியாது: மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்சிங் கோர்படே. இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் அவர் கூறியதாவது:

மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் உள்ள துங்கரேஷ்வர் அருவி, ராய்காட் பகுதியில் உள்ள தேவ் குந்த், திரியம்பகேஷ்வரில் உள்ள துகர்வாடி, பல்கர் மாவட்டம் ஜவஹர் பகுதியில் உள்ள கல் மாண்ட்வி போன்ற நீர் நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 பேர் முதல் 2,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

உடல்களை மீட்க பல நாட்கள் ஆகின்றன. இது அடிப்படை உரிமை, சம உரிமை, வாழ்வுரிமை ஆகிய சட்டப் பிரிவுகளை மீறுவதாக உள்ளது. மாநிலத்தில் உள்ள பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்நிலைகள் ஆபத்தானவையாக உள்ளன. அங்கு வேலி மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லை. எனவே விபத்துக்களை தடுக்க நீர் நிலைகளில் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி ஆரிப் டாக்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் அஜித் சிங்கின் வழக்கறிஞர்கள் மணீந்திர பாண்டே மற்றும் ஆயுஷி சவுகான் ஆகியோர், ‘‘சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் இருந்து இந்த தகவல்கள் திரட்டப்பட்டன’’ என்றனர். அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது:

சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை வைத்து பொதுநல வழக்கு தொடர முடியாது. நீதிமன்றத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், அதற்கு அடிப்படை ஆதாரம் என்ன? பொது நல வழக்கு தாக்கல் செய்யும்போது பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. சிலர் பிக்னிக் சென்று நீர் நிலைகளில் மூழ்குகின்றனர். அதற்காக பொது நல வழக்கு தொடுப்பதா? சிலர் விபத்தில் நீரில் மூழ்கலாம். இதில் உரிமை மீறல்கள் எங்கே இருக்கிறது? இந்த மனுவில் தெளிவான விவரங்கள் இல்லை. தகுந்த புள்ளி விவரங்களுடன் பொது நல மனுவை தாக்கல் செய்யுங்கள். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in