Last Updated : 22 Jan, 2018 02:05 PM

 

Published : 22 Jan 2018 02:05 PM
Last Updated : 22 Jan 2018 02:05 PM

2008 குஜராத் வெடிகுண்டு தாக்குதல்: 9 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் பின்லேடன் கைது

2008-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்டவரும், இந்தியாவின் பின்லேடன் என அழைக்கப்படும் சிமி-இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரேஷியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு பின் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சுபான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2008-ம் ஆண்டு, ஜூலை 26-ம்  தேதி குஜராத்தில் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிமி-ஐஎம் அமைப்பைச் சேர்ந்த அப்துல் சுபான் குரோஷி ஆகும். இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ இவர் முயற்சி செய்து வந்தார். இதையடுத்து இவரை தேடப்படும் குற்றவாளியாக குஜராத் போலீஸார் அறிவித்தனர்.

குரேஷி என்ற தவுகீர் எனும் பெயரில் வலம் வந்த அப்துல் சுபான் குரேஷியை தேசிய புலனாய்வு அமைப்பினரும் தேடி வந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நடந்த புறநகர் ரயில் குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

இதையடுத்து குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், அகமதாபாத் குற்றவியல் பிரிவினரும், டெல்லி சிறப்பு போலீஸாருடன் இணைந்து குரேஷியை தேடி வந்தனர்.

போலீஸ் வட்டாரங்களில் இந்தியாவின் பின்லேடன் என்று குரேஷி அழைக்கப்பட்டார். தனது தோற்றத்தையும், பெயரையும் பலமுறை மாற்றி போலீஸாரிடம் தப்பி உள்ளதால் இந்த பெயரை போலீஸார் வைத்தனர்.

மேலும் வெடிகுண்டுகள் செய்வதிலும் திறன்படைத்தவரான குரேஷி, பெங்களூரு, ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கடந்த 1998-ம்ஆண்டு சிமி இயக்கத்தில் சேர்ந்த குரேஷி, அதன்பின் இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவ முயன்றுள்ளார்.

இந்நிலையில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நேபாளத்துக்கு தப்பிச் சென்ற குரேஷி அங்கு தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இப்போது மீண்டும் இந்தியாவுக்குள் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை நிறுவ முயன்றபோது கைது செய்யப்பட்டார். இதை குஜராத் போலீஸாரும் உறுதி செய்தனர்.

இது குறித்து போலீஸ் டி.சி.பி. பிரமோத் குஷ்வாலா கூறுகையில், "குஜராத் குண்டுவெடிப்பில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குரேஷி கைது செய்யப்பட்டார். இவர் போலி ஆவணங்கள் மூலம் நேபாளத்தில் பதுங்கி வாழ்ந்துவந்தார்.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பை  மீண்டும் இந்தியாவில் நிறுவும் நோக்கில் அவர் இந்தியாவுக்கு நுழைந்தார். அப்போது டெல்லி சிறப்பு போலீஸார் சிறிய அளவிலான துப்பாக்கி சூடு நடத்தி குரேஷியை பிடித்தனர். அதன்பின் கைதுசெய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x