Last Updated : 05 Jan, 2018 07:49 PM

 

Published : 05 Jan 2018 07:49 PM
Last Updated : 05 Jan 2018 07:49 PM

செம்மொழி மையத்தை திருவாரூர் பல்கலையுடன் இணைக்கக் கூடாது: மாநிலங்களவையில் மைத்ரேயன் வலியுறுத்தல்

சென்னையில் உள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு மையத்தை திருவாரூரின் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக கோரியுள்ளது. இதை அக்கட்சியின் எம்.பி.யான வா.மைத்ரேயன் இன்று மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மாநிலங்களவையில் மைத்ரேயன் பேசியதாவது:

''மத்திய அரசு தற்போது சென்னையிலுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தினை திருவாரூரிலுள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கத் திட்டமிட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான திட்டவரைவை மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்திற்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது. இது தவறான கொள்கை முடிவு. எனவே முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

உலக மொழிகளில் மிகவும் பழமை வாய்ந்த தனிச்சிறப்பு மிக்க தமிழ் மொழியை மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு செம்மொழியாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டது. 3000 ஆண்டுகள் நெடுவரலாறு கொண்ட பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழி இலக்கியங்கள் மொழி ஆய்வாளர்களின் மாபெரும் பொக்கிஷமாக விளங்குகிறது. சான்றோர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மூலாதார தமிழ் இலக்கியங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் ஒரு தன்னிகரில்லா செம்மொழியாகும். தமிழின் செம்மொழி சிறப்பு இயல்புகளை போற்றிடவும், அதன் அருமை பெருமைகளை அகிலம் முழுவதும் பரப்பிடவும் சென்னையில் மத்திய செம்மொழித் தமிழாய்வு மையத்தை மத்திய அரசு உருவாக்கியது. இத்தகைய அரிய பெருமை கொண்ட செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் எந்த ஒரு முடிவும் செம்மொழி ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி செயல்பாடுகள் நீர்த்து, குறைக்கப்பட்டு, அதன் தன்னாட்சிக்கு பங்கம் விளைவிப்பதாகவே இருக்கும். இது தமிழ் மக்களின் பழம்பெருமை மற்றும் பாரம்பரியத்தினை குறைத்திடும் செயலாகும்.

ஆகவே மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தினை மத்தியப் பல்கலைக்கழகத்தோடு இணைக்க நிதி ஆயோக் அளித்துள்ள பரிந்துரையை ஆரம்பத்திலேயே முற்றிலுமாக நிராகரித்து தற்போது இயங்கி வருவது போல் இனி எப்போதும் சென்னையில் இயங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்''.

இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x