Published : 29 Nov 2023 01:01 AM
Last Updated : 29 Nov 2023 01:01 AM

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியின் ஹீரோ- யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்? 

டேராடூன்: 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் இன்று மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்.

யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்? - பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும் டிக்ஸ் இருந்து வருகிறார். இந்த அமைப்பு நிலத்தடி பணிகள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கலான அபாயங்களை கண்டறிந்து தீர்க்கும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவாகும்.

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு உதவ, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் கடந்த நவம்பர் 20ஆம் தேதி அழைக்கப்பட்டார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிக்ஸ், “ஆரம்பத்தில், இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” என்றார்.

அவர் சொன்னது போலவே, இன்று (நவ.28) 41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் பிலிப் கிரீன் அர்னால்ட் டிக்ஸை தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x