Last Updated : 25 Jan, 2018 08:08 PM

 

Published : 25 Jan 2018 08:08 PM
Last Updated : 25 Jan 2018 08:08 PM

குடியரசு தின நிகழ்ச்சியில் ராகுலுக்கு 4வது வரிசையில் இருக்கை: மலிவான அரசியல்-காங். ஆவேசம்

புது டெல்லியில் நாளை நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அரசு 4-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி மலிவான அரசியல் நடத்துகிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

டெல்லியில் நாளை ராஜபாதையில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்சியில் 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

அப்போது நடக்கும் அணிவகுப்பு நிகழ்சியில் காண வி.ஐ.பி,களுக்கு இருக்கை ஒதுக்கை ஒதுக்கப்பட்டு இருக்கும்.

இதில் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 4-வதுவரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இன்னும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை விவரம் இன்னும் வரவில்லை

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " எங்களுக்கு கிடைத்த தவலின்படி, குடியரசு தின நிகழ்ச்சிக்கு செல்லும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 4-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். கடந்த ஆண்டு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அப்படி செய்யவில்லை. மத்தியில் ஆளும் மோடி அரசு, மலிவான அரசியல் செய்கிறது.

இருந்தபோதிலும்கூட, ராகுல் காந்தி நாளை நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்பார்" எனத் தெரிவித்தார்.

மற்றொரு மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பொது நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 4வது வரிசையில் இருக்கை ஒதுக்கி மத்திய அரசு அவரை அவமானப்படுத்துகிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்த நடக்கும் விழாவில் எப்போதும் காங்கிரஸ் தலைவருக்கு முன் இருக்கையில்தான் இருக்கை ஒதுக்கப்படும். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்தபோதுகூட, அவருக்கு முன் வரிசையில்தான் இருக்கை ஒதுக்கப்பட்டது.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் முதல்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

மாநிலங்களில்தான் எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகள் போல் நடத்தும் சூழல் இருந்து வருகிறது. ஆனால், தேசிய அரசியல் என்று வரும் போது, எதிர்க்கட்சி என்ற நிலையை மறந்து தலைவர்கள் ஒவ்வொருவரும் நட்புடன் பழகி, ஆரோக்கியமான சூழல் இருப்பதை பொது நிகழ்ச்சிகளில் காணமுடியும்.

ஆனால், மாநிலங்களில் நிலவும் ஆரோக்கியமற்ற அரசியல் சூழல் டெல்லிக்கும் பரவிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் போது, நடந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்த தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x