ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்:
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Updated on
1 min read

இரட்டை பதவி வகித்தது தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி இழக்கிறார்கள், விரைவில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலாளர்களாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நியமித்தார். இது அமைச்சருக்கு இணையான பதவியாகும்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் இரும் இரட்டை பதவி வகிப்பதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இளம் வழக்கறிஞர் பிரசாந்த் படேல் என்பவர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு புகார் அனுப்பினார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

இதற்கிடையே பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜர்னைல் சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், 20 எம்எல்ஏக்கள் மீதான புகாரை மட்டும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.

இதில் 20 எம்எல்ஏக்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதியில் இருந்து, 2016 செப்டம்பர் 8 வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என கடந்த 19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி,  டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை செய்யப்படும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் என குடியரசுத் தலைவரின் செய்தித்தொடர்பாளர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த 20 எம்எல்ஏக்கள் நீக்கத்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. டெல்லி சட்டசபையில் மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில் 66 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கிறார்கள். 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் கூட, 46 எம்எல்ஏக்கள் இருப்பதால், ஆட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in